பிரதான செய்திகள்

 


திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் இன்று  மாலை (21) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


 திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கும் எதிரான வழக்கு இன்று (21) காலை எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

 திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (21) காலை குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த ஆறு சந்தேக நபர்களுக்கும் எதிராக இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் பின்னர் குறித்த வழக்கானது நகர்த்தல் விண்ணப்பத்தின் மூலம் திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட பிணைக்கான விண்ணப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று (21) மாலை குறித்த நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


பொலிசாரின் சமர்ப்பணத்தின்போது குறித்த நபர்களிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவதால் ஆர்ப்பாட்டம், இனக்கலவரம் ஏற்படலாம் எனவும் அத்துடன் சாட்சிகள் வெளி மாவட்டங்களில் இருப்பதனால் சூம் தொழில்நுட்பம் மூலம் சாட்சிகளை பெற்றுக் கொள்வதாகவும் இவர்களை பிணையில் விடுவிப்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணத்தின் பின்னர் குறித்த நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

(அப்துல்சலாம் யாசீம்)


 


திருகோணமலையில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


கடந்த 17ஆம் திகதி திருகோணமலை கொழும்பு வீதியினூடாக திலீபனின் உருவச் சிலையை கொண்டு வரும்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 பேருக்கு தாக்குதல் நடத்தப்பட்டது இந்நிலையில் சந்தேகத்திற்கு நேரில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஆறு பேரையும் கடந்த பதினெட்டாம் திகதி சீனக்குடா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது 21 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதே நேரம் குறித்த வழக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் பத்தாம் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளை இட்டார்.

 


திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் நேற்றிரவு (20) உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69வயது) எனவும் தெரியவருகிறது.

வீட்டிலிருந்து நடந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த தியவுல்பொத்த என்ற இடத்தில் பொலிஸ் SI ஒருவரும் யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை- பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது

 


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர்மீது அவ்வீதியால் பயணித்த மலர்சாலை வாகனம் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

 இச்சம்பவம் இன்று (20) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் பழனியாண்டி (வயது 78) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 


 உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 


திருகோணமலை-மூதூர் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டப் பகுதியில் இன்று (20) பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரியும் கண்டன போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 



குறித்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கட்டைபறிச்சான் இறால் பாலத்தில் இருந்து பேரணியாக மூதூர் மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.


 இதன்போது தாக்குதல் சம்பவத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



 


நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் இன்று (19) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது.
இது இனங்களுக்கு இடையேயான  நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது.

தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில்,  பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்  அதி கவனத்துடன் செயற்பட கூடிய பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பில்  அவதான குறைவாக செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுடன்,  சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது.


எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த  செயற்பாட்டை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


திருகோணமலை-சர்தாபுர பகுதியில் திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (18)  குறித்த சந்தேக நபர்களை ஆஜர் படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை -கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் திலீபனின் உருவ சிலையை கொண்டு வரும்போது சர்தாபுர பகுதியில் வைத்து வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் வந்த குறித்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட  ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும், 35ற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களுக்கு ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உள்ளதாகவும் தெரிய வருகின்றது.




Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget