காட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு வழக்கு - திருமலையில் சம்பவம்

 

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் காட்டு புளியம் பழம் பறிக்கச் சென்ற ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வன இலாக்கா அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் காட்டுப் பகுதிக்குச் சென்று  மரக்கிளைகளை  வெட்டி காட்டு புளியம்பழங்களை கொண்டு சென்று கொண்டிருந்த போது இவர்களை கைது செய்ததாகவும் தெரியவருகின்றது.

இவ்வழக்கு இன்று (12)  பதிவு செய்யப்பட்டதாகவும் வன இலாக்கா அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மஹதிவுல்வெவ குளத்துக்கு மேலே உள்ள காட்டு பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் காட்டுப் பகுதிக்குச் சென்று மரக்கிளைகளை வெட்டி புளிய மரங்களை சேதப்படுத்தி வருவதாகவும் வன இலாகா அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில்  வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் இக்கட்டான நிலையில் வருடத்துக்கு ஒருமுறை தாங்கள் காட்டு பழங்களை பறித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதாகவும் காட்டுப்பகுதிக்கோ அல்லது மரங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக புளியம் பழங்களை பறித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள்  தெரிவித்தனர்.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் காட்டுப் பகுதிக்குச் சென்ற  ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு இலாகா அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال