(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் உள நலப்பிரிவு திறந்துவைக்கப்பட்டது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் இன்று (11) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள சுமார் 75 நோயாளர்கள் மாதாந்தம் கிண்ணியா தள வைத்தியசாலையின் உளநல வைத்தியரின் உதவியுடன் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனை தேவைப்படும் பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை அல்லது கந்தளாய் தள வைத்தியசாலையினை நாடவேண்டி உள்ளதாகவும் இதனால பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனைக்கருத்தில் கொண்டு கந்தளாய் தள வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் டொக்டர் கயானி சிறிவர்த்தன அவர்கள் தன்னுடைய சேவையினை மாதாந்தம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் நடாத்துவதற்கு முன்வந்துள்ளார்.
இதன் மூலம் இதுவரை சிகிச்சை பெற்று வந்த இப்பிரதேச நோயாளர்கள் பயன்பெறுவதோடு புதிதாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெறாமல் இருப்பவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி டொக்டர் ஜீவராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வீ. பிரேமானந், டொக்டர் கௌரீஸ்வரன், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி மலர்விழி, பொது சுகாதார பரிசோதகர்கள், தம்பலகாமம் பிரதேச செயலக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments