திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் விலை கூடிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கந்தளாய் பிரதேசத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் உள்ள முதிரை, கருங்காலி, தேக்கை போன்ற விலை கூடிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும்,கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் வன இலாகா அதிகாரிகள் தங்களது வீடுகளுக்கு விடுமுறையில் சென்ற பின்னர் அதிகளவிலான மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மஹதிவுல்வெவ குளத்துக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டுள்ளதாகவும் மீன் பிடிக்க செல்வதாக கூறிக்கொண்டு சென்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பிரதேசத்திலுள்ள சிலர் குறிப்பிட்டனர்.
அத்துடன் இரவு நேரங்களில் இயந்திரங்கள் மூலம் மரங்கள் வெட்டப்படுவதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதிலும் பொலிஸார் கவனிக்காமல் இருந்ததாகவும், இக்காட்டு பகுதியில் அதிகளவில் சட்ட விரோத செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே காட்டுப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்கள் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட விரோதமாக மரங்கள் வெட்டியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Premium By
Raushan Design With
Shroff Templates