சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும் சாதகமான நடவடிக்கையாக ஜனாதிபதி இந்தக் குழுவை நியமிக்க உள்ளார். நாசகார ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் இதே போன்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். எனவே இந்த நிலைமை எரியும் நெருப்பில் வைக்கோல் சேர்ப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தப் பிரச்சினைகளை பரந்தளவில் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்காக, இந்த தூண்டுதல் ஏற்படுத்தும் கூற்றுக்களை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. தற்போதைய நிலைமையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விரிவாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ள இந்த இரண்டு அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சரியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைக்கு வழி வகுத்து, நிலைமையைப் பற்றிய தெளிவான புரிதலை சட்டம் இயற்றுபவர்களுக்கு வழங்குவதே இந்த விரிவான செயல்முறையின் நோக்கமாகும். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் முழு இலங்கையும் சோகத்தில் ஆழ்த்தியதை நினைவுகூர வேண்டியது அவசியம். உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளில் கலந்துகொண்ட பக்தர்கள் நிறைந்த கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சொகுசு நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து, கொழும்பு நகரம் மற்றும் அதன் அண்டிய 08 இடங்களில் பேரழிவை ஏற்படுத்தும் 08 வெடிப்புகள் இடம்பெற்றன. இஸ்லாமிய தீவிரவாத பயங்கரவாதக் குழுக்களினால் நடத்தப்பட்ட இந்த தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 269 அப்பாவி உயிர்கள் பலியாகியதோடு சுமார் 500 பேர் படுகாயமடைந்தனர். இந்த துயரச் சம்பவத்தின் பாதகமான விளைவுகளுடன் முழு நாடும் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது உண்மையை வெளிப்படுத்தவும், பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கையாகும். உண்மையைக் கண்டறிவதற்காக இந்த முக்கியமான விசாரணைகள் நடத்தப்படும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்கள் குறித்தும் முழுமையான மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments