திருகோணமலை பொது வைத்தியசாலையில் வீல்ச்செயார் தட்டுப்பாடு-உடைந்த துண்டுகளை தேடி பொருத்தும் சிற்றூழியர்கள்

 


                 (அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அனுமதிக்கும் இடத்தில் நோயாளர்களை ஏற்றிச் செல்லும் வீல்ச் செயார் (சக்கர நாற்காலி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


 திருகோணமலை மாவட்டத்தில் அதிக வைத்தியசாலைகளில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அதிகளவிலான நோயாளர்கள் இவ்வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் குறித்த நோயாளர்கள் அனுமதிக்கும் இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீல்ச் செயார்கள் தேவைப்படுகின்ற போதிலும் அனைத்து வீல்ச் செயார்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதுடன், உடைந்தும் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக குறித்த பிரிவில் கடமையாற்றும் ஊழியர்கள் தங்களது மேற்பார்வையாளர்களிடம் முறையிட்ட போதிலும்  வைத்தியசாலை அதிகாரிகள் புதிய வீல்ச் செயார்களை வழங்குவதற்கு நிதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டனர்.

இருந்த போதிலும் உடைந்த நிலையில் இரும்புக்காக விற்பனை செய்யப்படவிருந்த குறித்த வீல்ச் செயார்களை களஞ்சியசாலையில் இருந்து பெற்றுக்கொண்டு  திருகோணமலை பஷார் "உதவும் கரங்கள் அமைப்பின் உதவியுடனும், தங்களுடைய முயற்சியினாலும் யாரிடமும் கேட்கத் தேவையில்லை எனக்கூறி நோயாளர்களின் நலன் கருதி குறித்த பிரிவிற்கு பொறுப்பாக இருக்கின்ற சிற்றூழியர்கள்  வீல்ச் செயார்களை திருத்தி,நிறம் பூசி பயன்படுத்தி வருகின்றனர்.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக திருகோணமலை பொது  வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், நோயாளர்களுக்கு தேவையான வீல்ச் செயார்கள்  (சக்கர நாற்காலிகள்) தட்டுப்பாடாக காணப்பட்டது.

நோயாளர்களின் நலன் கருதி  தங்களால் இயன்ற சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த சிற்றூழியர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.