(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை திருக்கடலூர் மற்றும் விஜிதபுர மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 09 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.ஷாஹிர் முன்னிலையில் இன்று (07) மாலை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை- திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த ஆறு பேரும்,விஜிதபுர பகுதியைச் சேர்ந்த மூவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கடலூர் கடலோரத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது தாக்குதல்களை மேற்கொண்டதுடன் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை தலைமையக பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது வீடு ஒன்றுக்குள் சென்று உப்புகந்து வீட்டுக்கு சேதம் விளைவித்ததுடன் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரில் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த கைகலப்பின் போது தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.