திருகோணமலையில் காணாமல் போன மீனவர்களின் தாய்மார்கள் மனு மூலம் கோரிக்கை


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை- திருக்கடலூர் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 03 மீனவர்கள் கடந்த 13 நாட்களாக கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறு கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு காணாமல் போன மீனவர்களின் தாய்மார்கள்  உருக்கமாக மனு மூலம் கோரிக்கை விடுத்தள்ளனர்.


இக்கோரிக்கை கடிதத்தின் பிரதிகள், இலங்கைத் தூதரகம் - சென்னை , தமிழ்நாடு தூதுவர், இந்தியத் தூதரகம் - கொழும்பு , இலங்கை செயலாளர், கடற்றொழில் நீரியல் வள அமைச்சு , கொழும்பு ஆகியவற்றின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.


மேலும் காணாமல் போன மீனவர்களின் தாய்மார் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாவது-


திருகோணமலை மாவட்டம் திருக்கடலூர் எனும் கடற்றொழிலாளர் கிராமத்தில் கடற்றொழிலை ஜீவனோபாயமாக நம்பி பல குடும்பங்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றோம். 


இந்த நிலையில் கடந்த 23.05.2021 அன்று பகல் 01.00 மணிக்கு படகு இல- OFRP – A-6356 –TCO எனும் சிறிய படகு மூலம் தொழிலுக்குச் சென்ற எமது பிள்ளைகள் இன்று வரை கரை திரும்பாது காணாமல் போயுள்ளனர்.


ஜீவரெட்ணம் சரண்ராஜ்; (882983277V -34 வயது)


விஜேந்திரன் சஞ்ஜீவன் (200005300609V – 21 வயது)


சிவசுப்பிரமணியம் நதுஜன் (2000013901084V - 21 வயது) ஆகிய மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.


இதனை அறிந்து நாம் அங்கம் வகிக்கும் விபுலானந்தா கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு தெரியப்படுத்தினோம்.


அதனையடுத்து அவர்களின் முயற்சியால் சிறிய படகுகள் மூலமாகவும், பெரிய தாங்கி படகுகள் மூலமாகவும் காணமல் போன நாள் முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம்.


மேலும் கடற்படையினரும் தமது பணியை செய்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும் சாதகமான பலன் எதுவும் எட்டப்படாமல் எமது குடும்பமும் எமது கடற்றொழிலாளர் சமூகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கடந்த கால யுத்த சூழ்நிலையில் சொல்லெண்ணா துயரங்களை அனுபவித்து எமது பிள்ளைகளை இழந்து தற்போது சிறிது காலம் நிம்மதியாக வாழ்ந்து வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் எமது பிள்ளைகள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்த 29.05.2021 சென்னைக்கும் இலங்கை கடலுக்கு இடையே உள்ள எல்லையில் 10.24/80.20 என்ற GPS இலக்கத்தில் படகினைக் கண்டதாகவும் படகில் யாரும் இருக்கவில்லை என்றும் நீர்கொழும்பைச் சேரந்தவர்கள் பெரிய படகில் மீன்பிடிக்க சென்ற போது கண்டதாக தேடிச்சென்ற கடற்றொழிலாளர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மறுநாள் பிள்ளைகள் மூவரும் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது. எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.


எனவே, அமைச்சர் அவர்களே! எமது பிள்ளைகள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ உள்ளார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இந்த நம்பிக்கைக்கு சாதகமாக தங்களது கடற்றொழில் நீரியல் வள அமைச்சு மூலம் இலங்கை தூதரகம் மற்றும் இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி எமது பிள்ளைகளை மீட்டுத்தறுமாறு தங்களை பணிவுடன் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.