Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மூவர் மரணம்!


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 பேர் 
மரணித்துள்ளதுடன்,  கிழக்கு மாகாணத்தில் 62 பேர் இன்று வரை  உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் இன்று (15) காலை 10 மணியளவில் வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் 26 மரணங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 மரணங்களும், கல்முனைப் பிராந்தியத்தில் 13 மரணங்களும், அம்பாரை மாவட்டத்தில் 07 மரணங்களும் பதிவாகியுள்ளது.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கிண்ணியா, மூதூர் ,திருகோணமலை போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே பதிவாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 1200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அம்பாறை பிராந்தியத்தில் 763 பேரும் மட்டக்களப்பில் 389 பேரும், கல்முனையில் 66 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் அதிகமாக தொற்று பரவி வருவதால் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டாம்  எனவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும், சமூக இடைவெளி மற்றும் முக கவசங்களை பயன்படுத்துமாறும் கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments