திருமலையில் 24 மணித்தியாலத்திற்குள் 54 பேருக்கு கொரோனா!



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மே மாதம் மாத்திரம்  322 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்று ஆறாம் திகதி காலை 10 மணி முதல் இன்று 10 மணி வரை திருகோணமலை சுகாதார பிரிவில் 17 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும், மூதூர் பிரதேசத்தில் 10 பேரும், கிண்ணியா சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் 8 பேரும்,குச்சவெளி பிரதேசத்தில் 4 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், சேருவில பிரதேசத்தில் இருவரும் இனங் காணப்பட்டுள்ளதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் 408 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதாகவும், 16 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மொத்தமாக மூன்றாவது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் இன்று (07) காலை 10.00  மணி வரைக்கும் 1763 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 
டி ஜீ. எம்.கொஸ்தா தெரிவித்தார்.

இதேவேளை பெருநாள் காலமாக இருப்பதினால் வீடுகளை விட்டு தேவையற்ற விதத்தில் மக்களை நடமாட வேண்டாம் எனவும், சன நெருக்கடியான இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் சுகாதார பாதுகாப்புடன் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளிகளை பேணி நடக்குமாறும்,பிரயாணம் மேற்கொள்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. ஆர் .எம். தௌபீக் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال