(அப்துல்சலாம் யாசீம்)
தாய்ப்பால் புரையேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொற்கேணி பகுதியில் தாய் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்காக போட்டுவிட்டு பின்னர் 12 மணியளவில் குழந்தையை பார்த்த போது குழந்தையின் வாய் மற்றும் மூக்கு பகுதியில் இருந்து நுரை வழிந்த நிலையில் கிடந்ததாகவும் இதனையடுத்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கைக்குழந்தையின் சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். ரூமி பார்வையிட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார்.
இதேவேளை இச் சடலம் இன்று திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.