ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திம்பிரியத்தாவெல பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற நிலையில் காட்டுக்கு தேன் எடுப்பதற்காக இன்று (06) காலையில் சென்றபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த யானையின் தாக்குதலினால் அதே இடத்தைச் சேர்ந்த எம். எம் முர்சித் மௌலவி (26வயது) இளைஞர் படுகாயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-
சக நண்பர்களுடன் தேன் எடுப்பதற்காக காட்டுக்குச் சென்றபோது காட்டுக்குள் தேன் தேடுவதற்காக பிரிந்து செல்கின்ற போது நண்பர் ஒருவர் யானை யானை என கதறியுள்ளார்.
இதன்போது இவர் முன்னால் ஓடிய போது யானை மரங்களை முறித்து வீழ்த்தியுள்ளதை அவதானித்துள்ளார். இதேநேரம் மீண்டும் பின் புறமாக ஓடிச்சென்ற போது யானை அருகே வந்ததாகவும் இதேவேளை பயந்து ஓடிய போது வீழ்ந்ததாகவும் இதன் பிறகு யானை தூக்கி வீசியதாகவும் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினரொருவர் தெரிவித்தார்.
யானையின் தாக்குதலினால் இடுப்பு பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞர் தற்பொழுது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments