திருகோணமலை- மஹதிவுல்வெவ மற்றும் பதவிசிறிபுர பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்,மஹதிவுல்வெவ, பதவிசிறிபுர போன்ற பகுதிகளில் கடற்படை வீரர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த குடும்ப உறுப்பினர்களுக்கான கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மஹாதிவுல்வெவ மற்றும் பதவிசிறிபுர பகுதிகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த 10 பேரின் மாதிரிகள் இன்று (05) மஹதிவுல்வெவ அரச கிளினிக் மத்திய நிலையத்தில் வைத்து சேகரிக்கப்பட்டதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் விசேட வைத்திய செயலணி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா தொடர்பில் முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளும், விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வைத்திய செயலணியின் பிரதானி டொக்டர் வீ. பிரேமானந் உட்பட செயலணியின் அங்கத்தவர்களான டொக்டர் வீ. கௌரீஸ்வரன், எஸ். சௌந்தரராஜன் ஆகியோர்கள் கள விஜயமொன்றை மேற்கொண்டு மஹதிவுல்வெவ, கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலைகளை மேற்பார்வை செய்தனர்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பில் பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி டொக்டர் டி. நிரோஜன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் பாரிய கவனம் செலுத்தி வருவதாகவும், சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.