திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் உப்பு செய்கையாளர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
காக்காமுனை, கச்சகொடுத்தீவு, நடுஊற்று, அரை ஏக்கர், முனைச்சேனை, வில்வெளி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த
300 குடும்பங்கள் உப்பு செய்கையை மேற்கொண்டு வருவதாகவும் , அதனையே தன்னுடைய வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
கொரோனா நோயினால் நாட்டில் ஏற்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின் காரணமாக உப்புச் செய்கையில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் தங்களுக்கான விளைச்சலை பெற முடியாதுள்ளதாகவும் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சிலர் உப்பு செய்கையை மேற்கொண்ட போதிலும் அதனால் கிடைக்கப்பெறும் விளைச்சலை விற்க முடியாத நிலை காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
உப்பினை கொள்வனவு செய்வதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து புத்தளம், அம்பாந்தோட்டை,குருநாகல் போன்ற பிரதேசங்களிலிருந்து வியாபாரிகள் வருவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளை அரசாங்கமானது கருத்திற் கொண்டு வட்டி இல்லாத கடன், நிவாரணங்கள், மானிய அடிப்படையிலான கடன்களை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments