இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,342 ஆக உயர்வு 1886 பேர் மரணம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,592-லிருந்து 56,342-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,783-லிருந்து 1,886-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 15,267-லிருந்து 16,540-ஆக உயர்ந்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்கிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை காலை  வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 56,342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3900 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1886 ஆக உயர்ந்துள்ளது. 16540 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 17974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 694 பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 7012 பேருக்கும், டெல்லியில் 5980 பேருக்கும், தமிழகத்தில் 5409 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3252 பேருக்கும், ராஜஸ்தானில் 3427 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3071 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


துபாய், அபுதாபியில் இருந்து 363 பேர் கேரளா திரும்பினர்- 5 பேருக்கு கொரோனா அறிகுறி மருத்துவமனையில் அனுமதி



துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பியர்வர்களில் 5 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக 64 சிறப்பு விமானங்கள் தயார்படுத்தப்பட்டன.

அதன்படி ஏர்இந்தியா விமானம், நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகம் சென்று, அங்குள்ள அபுதாபி விமான நிலையத்திலிருந்து 49 கர்ப்பிணிகள் உள்பட 181 பயணிகளை சுமந்துகொண்டு நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தது. இதேபோல் துபாயில் இருந்து 182 பயணிகளுடன் புறப்பட்ட மற்றொரு விமானம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

விமான நிலையங்களில் அனைவரும் இறங்கியதும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொச்சி வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர்கள், அலுவா மாவட்ட மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். 

ஒருவருக்கு உடல்ரீதியான வேறு பாதிப்பு இருந்தது. அவர், எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த தனிமை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சில நாட்கள் அங்கு அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும்
49 கர்ப்பிணிகள், 4 குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 



அவுரங்காபாத்தில் ரெயிலில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்  மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு
 

மகாராஷ்டிர அருகே தண்டவாளத்தில் படுத்து தூங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரெயில் மோதியதில் 17 பேர் உடல் நசுங்கி பலி பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் 



மகாராஷ்டிர மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரெயில் மோதியதில் 17 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.சரக்கு ரெயிலில் சிக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தேசிய அளவிலான ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கி  தவித்தனர்.  இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக சிராமிக் எனப்படும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. மே 1ம் தேதி தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமை  வரை 83 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடந்த 5 நாட்களில் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் அருகே நேற்று முன்தினம் இரவு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் 6.30 மணிக்கு அந்த வழித்தடத்தில் வந்த சரக்கு ரெயில் அவர்கள் மீது  மோதியது. இதில் குழந்தைகள் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

மகாராஷ்டிராவில் தங்கியிருந்த மத்திய பிரதேச மக்கள் (பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள்), ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி நடந்து சென்றுள்ளனர். 

ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரெயிலும் வராது என்று நினைத்த, தொழிலாளர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். நேற்று இரவில் வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் தண்டவாளத்தில் படுத்து தூங்கி உள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சரக்கு ரெயில் வந்தபோது அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 

விபத்து குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரெயில் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக கூறி உள்ள பிரதமர் மோடி, இதுபற்றி ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுடன் பேசியதாகவும், அவர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். 

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு  உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலையும் கவலைகளையும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரெயில் மோதி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.கொரோனா பாதிப்பு ஒருபக்கம் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தொழிலாளர்கள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளது நாட்டு மக்கள் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது) 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget