முஸ்லிம் சமூகமே நோயை பரப்புகிறது என்பன போன்ற கருத்துக்களை ஊடகங்கள் முன்வைப்பது வருத்தமான விடயமாகும். ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என குறிப்பிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம்கள் எவரும் கொரோனா வைரஸ் காணமாக உயிரிழந்தால் அவர்களை நல்லடக்கம் செய்யும் முறைமை குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என நாம் கூறியும் இன்னமும் அதற்கான குழு நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸில் இருந்து நாட்டைப் பாதுகாக்ககவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது குறித்தும் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கும் விதத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கலந்துகொண்ட விவாதம் நேற்று வியாழக்கிழமை “மந்திரி.எல்கே“ முகப்புத்தக பக்கத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகயைில்,
இந்த சந்தர்ப்பத்தில் முறையான பொறிமுறை ஒன்றினை உருவாக்கி அனைவரையும் இணைத்து செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. இதற்கு மாற்றீடாக கட்சி தலைவர்கள் கூட்டமும் இடம்பெற்றது. எனினும் இவை அனைத்துமே ஊடக நிகழ்வாக மட்டுமே மாறியதே தவிர மக்களின் பிரச்சினைகளை இதில் சரியாக ஆராயவில்லை.
மக்கள் பக்கமுள்ள பிரச்சினைகள் எம்மால் எழுப்பப்பட்டது. இப்போது முஸ்லிம் கிரமங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்ககான உணவு, மருந்து பரிமாற்றல் எதுவும் சரியாக முன்னொடுக்கப்படவில்லை. அரசாங்கம் இதனை சரியாக செய்யவில்லை.பள்ளிவாசல, சிவில் அமைப்புக்கள் மூலமாக ஓரளவு உதவிகள் செய்து கொடுக்கப்பட்டன. மாறாக அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.
அதேபோல் ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக்கொண்டு ஒரு சமூகத்தை இலக்கு வைத்து விமர்சனங்கள் மூலமாக இதனை செய்கின்றனர். முஸ்லிம் சமூகம் நோயை பரப்புகின்றது என்ற கருத்துக்களை ஊடகங்கள் முன்வைப்பது வருத்தமான விடயமாகும்.
சுனாமி நேரத்தில் நிலைமைகளை கையாள விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது பல நெருக்கடிகள் இருந்தாலும்கூட அவ்வாறான முறைமை ஒன்றினை கையாள நினைத்தோம். இப்போதுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகளை நிராகரித்து ஒரு பக்க சார்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது மோசமானதாகும். இந்த நெருக்கடியை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செயற்படுவதை தவிர்ந்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். மேலும், முஸ்லிம்கள் எவரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தால் அவர்களை நல்லடக்கம் செய்யும் முறைமை குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என நாம் கூறியும் இன்னமும் அதற்கான குழு நியமிக்கப்படவில்லை.
அதே போல் நீரினால் கொரோனா பரவாது என உலக சுகாதார ஸ்தாபனமே கூறியுள்ளது. உலகில் அனைத்து நாடுகளும் இந்த முறைமையை பின்பற்றம்போது நாம் மட்டும் ஏன் அதனை நிராகரிக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது என்றார்.
No comments