திருகோணமலை-தென்னமரவாடி கடற்பகுதியில் பிற இடங்களைச் சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருதினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அக்கிராம மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
தென்னமரவாடி கிராமத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் மீன்பிடித் தொழிலை தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
வெளி இடங்களில் இருந்து வருகின்ற மீனவர்கள் சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தியும், கூடுகளைக் கட்டியும் மீன் பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கடல்வளம் அழிக்கப்படுவதோடு தமக்கான கடல்வளத்தை தமது வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முறையிட்டும் இதுவரை எவ்வித பலனும் இல்லை எனவும் இதனால் தொழிலுக்காக சென்று வெறும் கையோடு திரும்ப வேண்டியுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தென்னமரவாடி மக்கள் நாட்டில் நிலவிய யுத்த சூழல் காரணமாக தங்களது அனைத்து உடமைகளும் எரிக்கப்பட்ட நிலையில் 1984ம் ஆண்டு இடம்பெயர்ந்து 2009ம் ஆண்டுக்குப் பின்னர் கட்டம் கட்டமாக குடியமர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இடம்பெயர்வுக்கு முன்னர் இக்கிராமத்தில் 285க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்திருந்தாலும் இன்றைய நிலையில் 97 குடும்பங்களே மீள திரும்பி கிராமத்தில் பதிவு செய்திருக்கின்றார்கள். எனினும் இவர்களும் வாழ்வாதாரத்திற்காகவும், தொழிலுக்காக வந்த இடத்தை நோக்கி மீள திரும்பி சென்றுகொண்டிருக்கின்ற நிலையில் கிராமத்தில் தற்போது 50க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அத்துடன் யுத்தத்திற்கு முன்பிருந்தே காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டுவந்த விவசாய நிலங்கள் பெரும்பான்மையின மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு பூஜா பூமி எனும் பெயரில் பௌத்த பிக்குகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
வழிபாட்டு தலங்களும் தொல்லியல் திணைக்களத்தினாலும், பௌத்த பிக்குகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வழிபாடு மறுக்கப்பட்ட நிலையில் இக்கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுடைய வாழ்வாதாரமும் ஏனைய உரிமைகளும் உறுதி செய்யப்படாவிட்டால் இருக்கின்றவர்களும் ஊரைவிட்டு வெளியேறும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
No comments