மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை தொடர்பில் கிழக்கு ஆளுநர் சரியான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (24) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இக்கோரிக்கையினை முன் வைத்துள்ளார்.
தொடர்ந்தும் இவர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது-
மட்டக்களப்பு, மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுடைய பிரதானமான கோரிக்கை ஆளுநர் வரவேண்டும் என்பது இது தொடர்பாக ஆளுநருக்கு எடுத்துரைத்தோம். குறித்த காணி மகாவலி அதிகாரசபையின் கீழ் வருகின்ற காணிகளே தவிர கிழக்கு ஆளுநரின் அதிகாரத்தின்கீழ் வரும் காணிகள் அல்ல அந்த அடிப்படையிலே மாகாண ஆளுநரிடம் மட்டும் நாம் இதற்கான தீர்வை எதிர்பார்க்க முடியாது இதைப்பற்றி கௌரவ ஜனாதிபதியிடமும் கலந்துரையாடவுள்ளோம் எனவும், அதன் பின்னர்தான் மக்களுக்கு அது தொடர்பாக ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
எனினும் பண்ணையாளர்களுக்கு சரியான ஒரு முடிவை சொல்ல வேண்டிய ஆளும்கட்சி அமைச்சர்கள் தங்களுடைய சுயநலனுக்காக இயங்கிக்கொண்டிருக்கின்றார்களே தவிர மக்களுடைய பிரச்சினையைப் பற்றி எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்
இச்சந்திப்பில் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினை மட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்டத்தில் பௌத்த விகாரைகளுக்காக பிக்குகளால் அடாவடித்தனத்தின் மூலம் ஆக்கிரமிக்கப்படுகின்ற காணிகள், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மணல் அகழ்வு போன்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இதன் போது திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட குழு தலைவர் எஸ்.குகதாசன் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments