திருகோணமலை -கப்பல் துறையில் குடும்பத்தகராறு காரணமாக வாள்வெட்டு தாக்குதல்-
மூவர் படுகாயம்
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மூவர் வெட்டுக்காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது .
இவ்வாறு வெட்டுக் காயங்களுக்கு உள்ளானவர்கள் திருகோணமலையை கப்பல் திருகோணமலை-கப்பல்துறை ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த பெர்ணாந்து குமார் (47வயது) அவரது மனைவி முத்துமாரி (43வயது) மற்றும் ஆறு மாதக் குழந்தையான தக்சன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது -
23 வயதுடைய லக்சன் என்பவர் 15 வயதுடைய குமார் லக்சிகா என்பவரை திருமணமான நிலையில் சிறு வயது திருமணம் என்ற காரணத்தினால் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாகவும் இன்றைய தினம் அவரது கணவர் லக்சன் வீட்டுக்கு வந்ததாகவும் அப்போது 6 மாத குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
இதேநேரம் ஆறு மாத குழந்தையின் தாயாரான15 வயதுடைய குமார் லக்சிகா வீட்டில் இருக்கவில்லை எனவும் இதனை அடுத்து தகப்பனான கப்பல்துறை பெர்ணாந்து குமார் 47 வயதுடையவர் தனது மகளை அழைத்து 6 மாத குழந்தைக்கு பால் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதேநேரம் அவரது கணவர் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது வீட்டுக்குள் வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார்.
இதேவேளை இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வாளால் வெட்டிய போது மாமியார் தடுக்க சென்றதாகவும் இதேவேளை மாமனாரின் கையில் இருந்த குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த மூவரும் வெட்டுக்காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.
No comments