அரச தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,ஆளுநர் மற்றும் முக்கியஸ்தர்களின் வாய்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (10) கண்டி ஹரிஸ்பத்துவ தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்களை தொடர்ந்தும் எரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில் அரச தரப்பில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
ஆளுநர் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இதுவரை இது தொடர்பாக பாராளுமன்றத்துக்கு உள்ளேயோ வெளியேயோ எவ்வித நடவடிக்களோ இது பற்றிய பேசவோ இல்லை. இன்று சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதனை எதிர்த்து போராடி முகம் கொடுக்க முடியாதவர்களாக இவர்களின் வாய்க்காலுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதா?
இவர்களுக்கு மேலதிகமாக இருபதாம் திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்து அரசுடன் இணைந்த உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் இருபதாம் திருத்தசட்ட வாக்களிப்பு முடிவடைந்தது தொடக்கம் இன்றுவரை பாராளுமன்றத்திலோ ஊடகங்களிலோ ஒரு முறையேனும் பேசாத பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.
இவ்வாறு எமது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அமைதியாக இருந்த பின் ஏதாவது சாதகமாக நடைபெறுவது போல் தோன்றினால் கரும்பு சாப்பிட மட்டும் வெளியே வரும் உறுப்பினர்களும் உள்ளனர்.
ஆகவே எதிர்காலத்தில் இந்த இனவாத அரசாங்கத்துக்கும் இந்த வியாபார அரசியல்வாதிகளுக்கும் சிறந்த பாடம் புகட்டி அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழும் அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
Premium By
Raushan Design With
Shroff Templates